சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

31.8.11

சிறப்பு(சத்தியமா)ஆன்மிகபதிவு..!!

பிரியாணியும் உண்போம்.கொழுக்கட்டையும் தின்போம். :)
மதநல்லிணக்கம் காண்போம்.  


ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் மார்க்கவழி வாழும் 
நண்பர்களுக்கு வாழ்த்துகள்..!! Eid Mubarak


எளியவர்களுக்கெல்லாம் எளியவராய் விளங்கும் விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடி, குளக்கரை போன்ற இடங்களில் அமர்ந்துதான் தரிசனம் தருகிறார். இவருக்கு படைக்கப்படும் பொருட்களும் எளிமையானவையே. 

கவனிப்பாரற்று காட்டில் பூத்துக் கிடக்கும் எருக்கம் பூ, வாய்க்கால் வரப்புகளில் பரவலாக முளைந்திருக்கும் அறுகம்புல் போன்ற மிக எளிமையான பொருட்களைத் தாம் ஏற்றுக் கொண்டு, தன் பக்தர்களுக்கு அருளை வெள்ளமென பெருக்கி அருள்கிறார். இவருக்கு இருபத்தோரு திருநாமங்கள் உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. என்ன அவை?

கணேசன்: 

உலக உயிர்களுக்கும், பிரம்மத்துக்கும் தலைவன்.

ஏகதந்தன்:  

ஏக எனில் மாயை; தந்தன் எனில் மறைந்திருப்பவன். மாயைக்கு ஆட்படாமல் விலகி நிற்பவன் இவன். ஏகம் என்றால் ஒன்று என்றும் ஒரு பொருள் உண்டு. வியாசர் சொல்லச் சொல்ல, மகாபாரதத்தை, தன் தந்தம் ஒன்றை உடைத்து எழுதியதால், எஞ்சிய ஒரு தந்தத்துடன் விளங்குபவர் என்றும் கொள்ளலாம்.  

சிந்தாமணி: 

சிந்தை - மனம்; மணி - பிரகாசம். பக்தர் தம் மனதில் அஞ்ஞான இருள் நீக்கி, ஒளி பரவச் செய்பவன்.

விநாயகன்: 

வி - நிகரற்ற; நாயகன் - தலைவன். தனக்கு யாரும் நிகரில்லாத தலைவன்.

டுண்டிராஜன்: 

மோட்சத்தை அடைய விரும்புவோருக்கு வழிகாட்டுபவர்.

மயூரேசன்: 

வணங்காதவரை மாயையில் மூழ்கச் செய்தும், பக்தர்களை மாயை நெருங்காமலும் செய்பவன். 

லம்போதரன்: 

உலகினையே உள்ளடக்கியிருப்பதால் பெரிதாகக் காணப்படும் வயிற்றினை உடையவன். 

கஜானனன்: 

ஆணவம் எனும் யானையை அடக்கும் வல்லமை உள்ளவன்,  யானைமுகன்.

ஹேரம்பன்:  

ஹே - கஷ்டப்படுபவர்கள். ரம்ப - காப்பவன் ஆகிய பிரம்மன். துன்பப்படுவோரைக் காத்து ரட்சிப்பவன்.

வக்ர துண்டன்: 

பக்தர் தம் வாழ்வில் வரும் தீமைகளை தடுப்பவன். பிள்ளையாருக்கு இப்பெயரை அன்னை உமாதேவி வைத்தார்.

ஜேஷ்டராஜன்: 

ஜேஷ்டன் - முன்னவன், அனைத்துக்கும் முதல்வனாக, முதற் பொருளாகத் தோன்றி, அனைத்து உயிரினங்களையும் வழிநடத்திச் செல்பவன்.

நிஜஸ்திதி: 

உலகில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருப்பவன்.

ஆசாபூரன்: 

எல்லோரது ஆசைகளையும் நிறைவேறச் செய்பவன். இப்பெயரை கணபதிக்கு சூட்டியவர் புருசுண்டி முனிவர்.

வரதன்:  

வேண்டுவோர் வேண்டும் வரமளிப்பவன்.

விகடராஜன்: 

மாயையான உலகில், உண்மை பரம்பொருளாகத் திகழ்பவன்.

தரணிதரன்: 

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

சித்தி - புத்தி பதி: 

சித்தி எனும் கிரியா சக்திக்கும், புத்தி எனும் இச்சா சக்திக்கும் இடையே அவற்றின் தலைவனாக இருந்து ஞானத்தை அளிப்பவன்.

பிரும்மணஸ்தபதி:  

இப்பெயர், பிரம்மாவினால் வைக்கப்பட்டது. பிரும்மம் என்றால் சப்தம். வேத சப்தத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்.

மாங்கல்யேசர்: 

அழியக்கூடிய உலகில், தான் மட்டும் அழியாமலிருந்து அனைத்தையும் பரிபாலிப்பவர். 

சர்வ பூஜ்யர்: 

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.

விக்னராஜன்: 

தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவரது வாழ்விலும் எந்த விக்னமும் ஏற்படாமல் காப்பவர். 

Post Comment

15.8.11

எழுத்தாளருடன் நான்...

பதிவுலகிலும்,ட்விட்டரிலும்,இன்னபிற சமூகவலைத்தளங்களிலும் உலகமறிந்த(?!) பிரபலமாக நான் இருப்பது ஏற்கனவே நீங்கள் அறிந்த விடயம்.(மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்யா) அதற்குண்டான வழிமுறைகளை எற்கனவே என் வலைப்பூவில் இட்டு அந்தப்பதிவு பிரபலமானதும் உங்களுக்கு தெரிந்ததே....

பதிவுலகமும்,ட்விட்டரும் எனக்கு பல நண்பர்களை தந்திருக்கிறது.அந்த நண்பர்கள் வட்டத்தில் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் உள்ளனர் என்பது எனக்கு பெருமையளிக்ககூடிய விஷயம்.அதில் ஒருவரான கிழக்கு பதிப்பகத்தில் பல புத்தகங்களை எழுதியவரும்,புகழ்பெற்ற ட்விட்டருமான திரு.என்.சொக்கன் அவர்களை அறியாதவர்கள் எழுத்துலகில் இருக்க வாய்ப்பில்லை.அவர் இந்த வாரத்தில் சேலம் வந்திருக்கும்போது சேலத்திலிருந்து ட்விட்டும் அன்பர்களை சந்திக்க விருப்பம் கொண்டு ட்விட்டரில் தெரிவித்தவுடனே ஆர்வமாக அதை செயல்படுத்தி அந்த சந்திப்பையே ஒரு மாநாடு போல நடத்த பேராவல் கொண்டேன்.ஆனால்,அவரையும் அவர் சகோதரரையும் தவிர்த்து மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டதால் மாநாடு நடத்த முடியவில்லை.அடுத்த தடவை முன்னரே அவர் வருவது தெரிந்தால் அதை மாநாடாக நடத்த உறுதி பூண்டுள்ளேன். :)

எழுத்தாளர் என்றவுடன் தமிழ்சினிமா எனக்களித்த கொடையான கணிப்புத்திறனை வைத்து ஒரு முட்டிக்கால் வரை நீளும் ஜிப்பாவும்,அதற்கு மேட்ச்சாக ஒரு வெள்ளை பேண்ட்டும்,விரலைவிட பெரிதான ஒரு இங்க்பேனாவும்,முக்கியமாக ஒரு ஜோல்னாப்பையும்,தடிமனான கருப்புநிற பிரேம் கொண்ட கண்ணாடியும் போட்டுக்கொண்டு வருவார் என்று நினைத்திருந்தால் என் நினைப்பில் மண். ஃபார்மலாக வந்து தமிழ்சினிமாவின் பார்முலாவை உடைத்துவிட்டார் சொக்கன். ஏனென்றால் அவர் சினிமாவே பார்ப்பதில்லையாம்.  :)

அவருடன் பேசிக்கொண்டிருந்த போது எழுத்தாளர் என்ற பந்தா இல்லாமல் நண்பர்களுடன் பழகுவதுபோல்தான் இருந்தது . கூடவந்த நண்பன் கார்த்தி புண்ணியத்தில் Iphone, Apple, Nokia, Microsoft, Bill gates, Android, Oracle, E-book reader, Kindle, Nook, NHM, SLR, Edu-comp, etc., அவருடைய தமிழ்இலக்கியவலைப்பூ என்று இரண்டு மணி நேரத்தில் இவ்வளவையும் அலசினோம்.மற்ற சேலம் நண்பர்கள் தவறவிட்ட அருமையான சந்திப்பு இது. ஞாயிற்றுக்கிழமை அன்று காதலர்கள் மட்டுமே வரும் சேலம் அண்ணாபூங்காவில் எழுத்தின் மீது கொண்ட காதலால் இந்த சந்திப்பு இனிமையாகவும்,பயனுள்ளதாகவும் அமைந்தது.

சந்திப்பின்போது எடுத்த பிரத்யேக படங்கள் உலக வலைப்பூ வரலாற்றில் முதல்முறையாக உங்கள் சேலம்தேவாவின் வலைப்பூவில் மட்டுமே காணக்கிடைக்கும்.(வேற யாரும் கேமரா எடுத்துட்டு வராதது நல்லதாப்போச்சு)

எஸ்.சொக்கன்,என்.சொக்கன்,ஸ்ரீனிவாசன்,கார்த்திக்

இதில் வலப்புறம் கடைசியில் நான்


அண்ணாபூங்கா முன்பு

சேலத்துக்கு வரும் எழுத்தாளர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே தெரியப்படுத்தினால் இதுபோன்ற சந்திப்புகளை மாநாடாக நடத்த ஏதுவாக இருக்கும் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  :)

Post Comment

10.8.11

ஆடித்திருவிழா

திருவிழாக்கள் பண்டையகாலத்திலிருந்து எல்லா மதத்தினராலும் விதம்விதமாக கொண்டாடப்படுகிறது.திரு என்ற அடைமொழி சேர்த்து விழாக்களுக்கும் மரியாதை கொடுப்பது நமது பண்பாடாக விளங்குகிறது.எதையும் கொண்டாட்டத்துடன் அணுகும் முறை இந்தியர்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.எப்போதும் பாடுபடும் பாட்டாளிகளுக்காக ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக தெய்வ நம்பிக்கையையும் சேர்த்து திருவிழாக்களை உருவாக்கி வைத்துள்ளனர்.சொந்தங்கள் சேர்வதற்கும்,மனமகிழ்ச்சிக்காகவும்,விழாக்கள் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு வருமானத்திற்காகவும் திருவிழாக்களை உருவாக்கி வைத்துள்ளனர் முன்னோர்கள்.திருவிழாக்கள் நடக்கும் ஊர்களின் பண்பாடு,கலாச்சார குறியீடுகளை அறிந்து கொள்ள திருவிழா ஒரு வழியாக இருந்தது.ஸ்ஸ்ஸ்ப்பா...தூக்கம் வருதில்ல..

ஹி.ஹி..தவறி வேற எதாவது வலைப்பூவுக்கு வந்துட்டமோன்னு பயப்படாதீங்க...ஸ்கூல் படிக்கும்போது எதைப்பத்தியாவது கட்டுரை எழுதச்சொன்னா இப்டி பக்கம்பக்கமா அடிச்சி வுடுவேன்.இது ஒரு சாம்பிள்தான்...வேற ஒண்ணுமில்லீங்க.சேலத்துல ஆடித்திருவிழா நடக்குது.பதிவுலக நண்பர்களை சேலம் திருவிழாவுக்கு அன்போடு அழைக்கிறேன்.

கோட்டை மாரியம்மன் கோவில் கோபுரம்

பதினெட்டுபட்டிக்கும்(?!) தலைமை மாரியம்மன் கோட்டை மாரியம்மன் கோவில்ல ஆரம்பிச்சி ஊர்ல எந்த பக்கம் திரும்பினாலும் கோவில்களா இருக்கும்.அதுல எல்லாக் கோவில்லயும் ஆடி மாசம் பண்டிகையா இருக்கும்.அரசுப்பொருட்காட்சி வேற போட்ருக்காங்க.சேலமே ஜெகஜோதியா இருக்கும்.ஒரு வாரத்துக்கு சேலம் ரத்தபூமியா மாறிடும்.முதல்வர் அம்மா இலவசமா கொடுக்கறதுக்கு வெளி மாநிலங்கள்ல ஆடு,மாடு வாங்கறதுக்கு காரணமே சேலம் மக்கள்தான்.ஏன்னா அப்டி தின்னுவோம்.ஹி..ஹி...

சக்திஅழைக்கறதுன்ற பேர்ல ஒருத்தருக்கு காளியாத்தா மூஞ்சி கொண்ட மாஸ்க் எல்லாம் வச்சு எட்டு கை வச்சி அழைச்சுட்டு வருவாங்க.பம்பை மேளத்தோட அவரு ஆடி வரும்போது ஆல் லேடிஸ் சாமி வந்து ஆடுவாங்க.ஒரே பக்திப்பரவசமா இருக்கும்.தலைவர் கவுண்டமணி பூமிதிச்ச கதை உங்களுக்கு தெரியும்.அதுமாதிரி இங்க எல்லாக்கோயில்லயும் மிதிப்பாங்க.அந்தப்பக்கமே போக மாட்டேன்.எவனாவது நம்மள மிதிக்கச்சொல்லிட்டா..?!பூச்சட்டின்னு சொல்லிட்டு நெருப்புசட்டிய தூக்கிட்டு தலையில வச்சிகிட்டு ஆடுவாங்க.உள்ள சுட்டாலும் வெளிய காமிக்காம செமயா டான்ஸ் ஆடுவாங்க.எனக்கு தெரிஞ்சு ஒருத்தருக்கு தலையெல்லாம் வெந்திருக்கு.ஆர்வக்கோளாறுல தலையில சேப்டி பிரிகேசன்ஸ் எல்லாம் பண்ணாம ஆடிட்டாரு.ஹி..ஹி...

அலகு குத்தறதுன்ற பேர்ல நல்ல கூரான வேலை வாய்ல இந்தப்பக்கம் குத்தி அந்தப்பக்கம் இழுத்து அந்த வலியிலயும் டான்ஸ் ஆடிகிட்டு வருவாங்க.ஆட்டோ,ஆம்னிவேன்,ஆட்டுக்கல் இந்தமாதிரி இழுக்க முடிஞ்ச பொருட்களை கயித்துல கட்டி கொக்கி போட்டு முதுகில குத்தி இழுத்துட்டு வருவாங்க...வேண்டுதலாமாம்.புல்டோசர்,லாரி மாதரி பெரிய பொருள்லாம் இழுக்க மாட்டாங்க.ஹி..ஹி...முதுகு கிழிஞ்சிருமுல்ல.வித்தியாசமா வேண்டுதல் நிறைவேத்தறதுல சேலம் வழி எப்பவும் தனிதான்.

வியாழக்கிழமை குகைப்பகுதியில்(சேலத்துல ஒரு ஏரியா) வண்டிவேடிக்கை நடக்கும்.ஒரே வேடிக்கையா இருக்கும்.புராண காட்சிகள்,சாமி வேஷம் எல்லாம் போட்டுகிட்டு பெரிய வண்டிங்க வரும்.சாமிங்க எல்லாம் நமக்கு ஹாய்...சொல்லிட்டு வரும்.டே..பீமா..நல்லா தெம்பா உக்காந்து வாடா...சிவனுக்கு சீக்கு வந்தமாதிரி வர்றான் பாரு...அனுமார் வேஷத்துக்கு அவனுக்கு மேக்கப்பே தேவையில்ல.ஏற்கனவே அந்த மாதிரிதான் இருக்கான்.ராமர் வேஷம் போட்டுகிட்டு எல்லாப்பொண்ணுங்களுக்கும் டாட்டா காட்டிகிட்டு வர்றான் பாரு...இந்தமாதிரி வேஷம் போட்டுகிட்டு வர்றவங்கள செமயா கலாய்ப்பாணுங்க.குசும்பு புடிச்ச (சேலம்) பயலுவ.

இதெல்லாம் பாக்கும்போது பெரியார் அப்பப்ப மைண்ட்ல வந்துட்டு போவாரு.இந்த செலவுகளை ஏதாவது இல்லாத குழந்தைகளுக்கோ,முடியாதவங்களுக்கோ உதவி பண்ணலாம்ன்னு நெனைக்கத்தோணும்.பண்ண மாட்டாங்க...சாமிக்கு கூட அதுதான் பிடிக்கும். பக்தி எனக்கும் இருக்கு. நம்மை மீறிய ஒரு சக்தி நம்மள இயக்குதுன்ற நம்பிக்கை மட்டுமே.மத்ததெல்லாம் மற்றவங்க விருப்பத்துக்காகத்தான் பண்ணிகிட்டு இருக்கோம்.ஆத்திகர்களுக்கு பக்தியாகவும்,நாத்திகர்களுக்கு கேலியாகவும் தோன்றும்.ம்ம்ம்...வளரும் சூழ்நிலைதான் தீர்மானிக்குது.

இதுபோன்ற காட்சிகள்,கலாய்ப்புகளை நேரில் காண வருக.. வருக.. வருக... என அன்போடு அழைப்பது உங்கள் சேலம் தேவா..தேவா..தேவா..ஹி..ஹி... எக்கோ எபக்ட்டோட படிங்க(இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல)

Post Comment