சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

25.9.11

சிற்றுலா

நான்கு நாட்கள் மேல் ஊர்சுற்றினால் சுற்றுலா.ஒரேநாள் மட்டும் சுற்றினால் சிற்றுலா..ஹி..ஹி..

சேலத்தில் பொழுதைபோக்குவதற்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த இடமும் இல்லை.மேட்டூர் பக்கத்தில் இருந்தாலும் ஊரில் எந்த ஆறும் ஓடுவதில்லை.எல்லாம் பல கிலோ மீட்டர் தள்ளி ஓடி கடுப்பேற்றுகிறது.இருக்கும் ஒரே ஆறு திருமணிமுத்தாறுதான்.பேருதான் ஆறு.ஆனால்,அதை சாக்கடையாக்கி நாறுகிறது.ஆற்றின் கரையை ஆட்சிமாறி மாறி கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.சரி விடுங்கள்...இந்த பதிவில் எதற்கு அரசியல்..?!

சேலத்தில் இருக்கும் கோவில்கள்,ஏற்காடு,அண்ணாபூங்கா,வருடாவருடம் நடக்கும் அரசுப்பொருட்காட்சி என்று இந்த இடங்களில் கூடும் கூட்டத்தை கண்டால் சேலம் மக்களின் பொழுதுபோக்கு இல்லாத ஏக்கம் தெரியும். :(

பராமரிப்புக்காக மின்தடை ஏற்படுத்தும் நாட்கள் வனபோஜனம்(picnic) (நன்றி:கூகிள் ட்ரான்ஸ்லேட்) செல்வதற்கு ஏற்ற நாள்.:)சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் உடையாப்பட்டியில் கந்தாஸ்ரமம் என்ற கோவில் உள்ளது.பக்திமான்களுக்கு நல்ல இடம்.இயற்கையை ரசிப்பவர்களுக்கு இன்னும் நல்ல இடம்.


மற்ற கோவில்களில் உள்ளது போல் தட்சணை போடாவிட்டால் முகத்தை காட்டும் அர்ச்சகர்கள் இல்லாமல் கனிவான அர்ச்சகர்கள் உள்ளனர்.உண்டியலும் கிடையாது.தியானம் செய்வதற்கு ஏற்ற மிக அமைதியான இடம். 


தெய்வசிற்பங்கள் மிகவும் நுட்பமாக,அழகாக செய்யப்பட்டுள்ளது.கல்லிலே கலை வண்ணத்தை காணலாம்.மிக பிரம்மாண்ட முறையில் சிலைகளை வடித்துள்ளனர்.தியான மண்டபம் தனியாக உள்ளது.அங்கு சித்தர்கள் மற்றும் ஞானிகளுடைய சிலைகளையும் காணலாம்.கோவிலின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.வெளித்தோற்றம் மட்டுமே எடுத்தேன்.உணவுப்பொருட்கள் கொண்டுசென்றால் முன்னோர்களிடமிருந்து காத்துக்கொள்வது அவரவர் சாமார்த்தியம்.


கோவிலின் முகப்புக்கு இடதுபுறம் சற்று கீழே கன்னிமார் கோவிலும்,ஓடையும் உள்ளது.நகரத்தில் இருப்பவர்களின் சோகமான நீச்சல் தெரியாததை பொருட்படுத்தாமல் குதிப்பதற்கு உயரம் குறைவான ஓர் ஓடை உள்ளது.நாங்கள் சென்றிருந்தபோது பள்ளிக்கல்வி பிடிக்காமல் இயற்கைக்கல்வி கற்க வந்திருந்த சில மாணவர்களை பார்த்தோம்.ஹி..ஹி...(அதாங்க ஸ்கூல் கட் அடிக்கறதுன்னு டீஸன்ட் இல்லாம சொல்வாங்களே..)

பெற்றவர்கள் பார்க்காமல் இருந்தால் சரி..!!  :)
குடும்பத்துடன் நன்றாக பொழுது கழிந்தது.தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு(ஆறு,குளம்,கடல்) சென்றால் நம் மனதில் குதூகலம் தோன்றுவதின் உளவியல் காரணம் என்னவென்று தெரியவில்லை.குடும்பத்துடன் அவ்வப்போது வெளியே செல்வது மனமகிழ்ச்சியையும்,புத்துணர்ச்சியையும் தரவல்லவை.குழந்தைகள் வெளி இடங்களை தொலைக்காட்சிகளை பார்த்து தெரிந்துகொள்வதற்கு பதில் நிஜத்தை பார்த்து அறிந்துகொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.புத்தகங்களில் குரங்கு,ஆடு,மாடு என்பதை காட்டுவதை விட நேரில் அவற்றை காணும்போது இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆடா,நானா ஒரு கை பார்த்து விடுவோம் என்று ஆட்டிடம் சண்டை போடும் என் செல்ல மகள்...
மாதாமாதம் இதே போன்று வனபோஜனம் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.சேலத்தின் இதுபோன்ற இடங்களை புகைப்படங்களாக பார்ப்பதற்கு தனி வலைப்பூ ஒன்றை தொடங்கியுள்ளேன்.பார்த்து கருத்து தெரிவித்தால் மகிழ்வேன்.
Post Comment