சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...
Showing posts with label சேலம். Show all posts
Showing posts with label சேலம். Show all posts

18.1.12

சர்க்கஸ்

இந்தமுறை பொங்கல் விடுமுறை நீண்ண்ண்ண்ட நாட்கள் இருந்ததுபோல் ஒரு உணர்வு.பொழுதுபோக்கிற்கு தொலைக்காட்சியை விட்டால் வேறு போக்கிடம் இல்லாமல் போய்விட்டது.

காணும் பொங்கல் அன்று பெரியவர்கள், நண்பர்களை கண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளாமல் தொலைக்காட்சியை கண்டு கொண்டு இருக்கிறோம்.

புதிதாக வந்த திரைப்படங்களை திரையரங்கில் பார்க்கலாம் என்றால் திரையரங்கத்தினர் ஒரு வாரத்திற்குள் போட்ட பணத்தை எடுக்கும் பொருட்டு விலையை அவர்கள் விருப்பத்திற்கு உயர்த்தி விடுவார்கள்..அதுவும் ரசிகர்கள் இடும் கூச்சலில் படம் பார்த்த திருப்தியே வராது.


இந்தமுறை பலவருடங்கள் கழித்து சர்க்கஸ் சென்றோம். சர்க்கஸின் கூரையில் உள்ள கிழிசல்களே அவர்களின் வறுமை நிலையை உணர்த்துகிறது. குழந்தைப்பருவத்திற்கு திரும்பிவிட்டாற்போன்று ஒரு உணர்வு. ஆனால், விலங்குகள் நலவாரியத்தின் புண்ணியத்தால் நான் சென்றபோது சர்க்கஸில் இருந்த விலங்குகள் இப்போது 10 சதவீதம் கூட இல்லை. 1 யானை,2 குதிரை,2 ஒட்டகம்,3 நாய்கள் இவை மட்டுமே காண முடிந்தது. இவைகளை விலங்குகள் பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்களா தெரியவில்லை.அவைகளும் பார்க்க பரிதாபமான நிலையில்தான் இருந்தது.

பிழைப்புக்காக மனிதர்கள் உயிரைப் பணயம் வைத்து அந்தரத்தில் செய்யும் சாகச விளையாட்டுகளை காணும்போது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. குள்ள மனிதர்களை பார்க்கும்போது அபூர்வசகோதரர்கள் கமல்தான் நினைவுக்கு வந்தார்.பரிகசிக்கும் இளைஞர்களை பொருட்படுத்தாமல் நிறைவாக சிரித்தமுகத்துடனும், குறைவான ஆடைகளுடனும் வந்த பெண்களின் நிலை உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது. 



நீண்ட கத்தியை இருதயம் வரை சொருகுவது,கத்திப்படுக்கையின் மேல் படுப்பது.சைக்கிள் சாகசங்கள்,மரணகூண்டில்(அப்படிதான் அறிவித்தார்கள்) மோட்டார் சைக்கிள் சாகசம்,ஒரு சாகசக்காரர் 1 லிட்டர் தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் அதை வாய்வழியே அதை சிறிது சிறிதாக வெளியேற்றுகிறார்.இருவேறு வண்ணங்கள் கொண்ட தண்ணீரை குடித்து அதை தனித்தனியாக வெளியேற்றியது வியப்பூட்டுவதாக இருந்தது. (இந்தப்பயிற்சி யோகக்கலையின் மூலம் சாத்தியம் என்று நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் பகிரவும்)இப்படி இரண்டரை மணி நேரக்காட்சியை ஓட்டுவதற்கு பாடுபடுகிறார்கள்.

குழந்தைப்பருவத்தில் இருந்த குதூகலங்கள் மறைவது வயதாவதை நினைவுறுத்துகிறது.என் மகளை யானை வரும் என்று சொல்லியே தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டேன்.உங்கள் ஊரில் சர்க்கஸ் நடைபெற்றால் நம்முடைய குழந்தைகளுக்காகவும்,சர்க்கஸில் உள்ள கலைஞர்களுக்காகவும் ஒருமுறை சென்று வாருங்கள். மகளுக்கு மகிழ்ச்சியுமாய்,மனதுக்கு நெகிழ்ச்சியுமாய் நேற்றைய பொழுது கழிந்தது.

குறிப்பு: பதிவில் இருக்கும் படங்கள் கூகிளின் வழியே எடுத்தது.சர்க்கஸ் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லையாம்.



Post Comment

10.8.11

ஆடித்திருவிழா

திருவிழாக்கள் பண்டையகாலத்திலிருந்து எல்லா மதத்தினராலும் விதம்விதமாக கொண்டாடப்படுகிறது.திரு என்ற அடைமொழி சேர்த்து விழாக்களுக்கும் மரியாதை கொடுப்பது நமது பண்பாடாக விளங்குகிறது.எதையும் கொண்டாட்டத்துடன் அணுகும் முறை இந்தியர்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.எப்போதும் பாடுபடும் பாட்டாளிகளுக்காக ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக தெய்வ நம்பிக்கையையும் சேர்த்து திருவிழாக்களை உருவாக்கி வைத்துள்ளனர்.சொந்தங்கள் சேர்வதற்கும்,மனமகிழ்ச்சிக்காகவும்,விழாக்கள் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு வருமானத்திற்காகவும் திருவிழாக்களை உருவாக்கி வைத்துள்ளனர் முன்னோர்கள்.திருவிழாக்கள் நடக்கும் ஊர்களின் பண்பாடு,கலாச்சார குறியீடுகளை அறிந்து கொள்ள திருவிழா ஒரு வழியாக இருந்தது.ஸ்ஸ்ஸ்ப்பா...தூக்கம் வருதில்ல..

ஹி.ஹி..தவறி வேற எதாவது வலைப்பூவுக்கு வந்துட்டமோன்னு பயப்படாதீங்க...ஸ்கூல் படிக்கும்போது எதைப்பத்தியாவது கட்டுரை எழுதச்சொன்னா இப்டி பக்கம்பக்கமா அடிச்சி வுடுவேன்.இது ஒரு சாம்பிள்தான்...வேற ஒண்ணுமில்லீங்க.சேலத்துல ஆடித்திருவிழா நடக்குது.பதிவுலக நண்பர்களை சேலம் திருவிழாவுக்கு அன்போடு அழைக்கிறேன்.

கோட்டை மாரியம்மன் கோவில் கோபுரம்

பதினெட்டுபட்டிக்கும்(?!) தலைமை மாரியம்மன் கோட்டை மாரியம்மன் கோவில்ல ஆரம்பிச்சி ஊர்ல எந்த பக்கம் திரும்பினாலும் கோவில்களா இருக்கும்.அதுல எல்லாக் கோவில்லயும் ஆடி மாசம் பண்டிகையா இருக்கும்.அரசுப்பொருட்காட்சி வேற போட்ருக்காங்க.சேலமே ஜெகஜோதியா இருக்கும்.ஒரு வாரத்துக்கு சேலம் ரத்தபூமியா மாறிடும்.முதல்வர் அம்மா இலவசமா கொடுக்கறதுக்கு வெளி மாநிலங்கள்ல ஆடு,மாடு வாங்கறதுக்கு காரணமே சேலம் மக்கள்தான்.ஏன்னா அப்டி தின்னுவோம்.ஹி..ஹி...

சக்திஅழைக்கறதுன்ற பேர்ல ஒருத்தருக்கு காளியாத்தா மூஞ்சி கொண்ட மாஸ்க் எல்லாம் வச்சு எட்டு கை வச்சி அழைச்சுட்டு வருவாங்க.பம்பை மேளத்தோட அவரு ஆடி வரும்போது ஆல் லேடிஸ் சாமி வந்து ஆடுவாங்க.ஒரே பக்திப்பரவசமா இருக்கும்.தலைவர் கவுண்டமணி பூமிதிச்ச கதை உங்களுக்கு தெரியும்.அதுமாதிரி இங்க எல்லாக்கோயில்லயும் மிதிப்பாங்க.அந்தப்பக்கமே போக மாட்டேன்.எவனாவது நம்மள மிதிக்கச்சொல்லிட்டா..?!பூச்சட்டின்னு சொல்லிட்டு நெருப்புசட்டிய தூக்கிட்டு தலையில வச்சிகிட்டு ஆடுவாங்க.உள்ள சுட்டாலும் வெளிய காமிக்காம செமயா டான்ஸ் ஆடுவாங்க.எனக்கு தெரிஞ்சு ஒருத்தருக்கு தலையெல்லாம் வெந்திருக்கு.ஆர்வக்கோளாறுல தலையில சேப்டி பிரிகேசன்ஸ் எல்லாம் பண்ணாம ஆடிட்டாரு.ஹி..ஹி...

அலகு குத்தறதுன்ற பேர்ல நல்ல கூரான வேலை வாய்ல இந்தப்பக்கம் குத்தி அந்தப்பக்கம் இழுத்து அந்த வலியிலயும் டான்ஸ் ஆடிகிட்டு வருவாங்க.ஆட்டோ,ஆம்னிவேன்,ஆட்டுக்கல் இந்தமாதிரி இழுக்க முடிஞ்ச பொருட்களை கயித்துல கட்டி கொக்கி போட்டு முதுகில குத்தி இழுத்துட்டு வருவாங்க...வேண்டுதலாமாம்.புல்டோசர்,லாரி மாதரி பெரிய பொருள்லாம் இழுக்க மாட்டாங்க.ஹி..ஹி...முதுகு கிழிஞ்சிருமுல்ல.வித்தியாசமா வேண்டுதல் நிறைவேத்தறதுல சேலம் வழி எப்பவும் தனிதான்.

வியாழக்கிழமை குகைப்பகுதியில்(சேலத்துல ஒரு ஏரியா) வண்டிவேடிக்கை நடக்கும்.ஒரே வேடிக்கையா இருக்கும்.புராண காட்சிகள்,சாமி வேஷம் எல்லாம் போட்டுகிட்டு பெரிய வண்டிங்க வரும்.சாமிங்க எல்லாம் நமக்கு ஹாய்...சொல்லிட்டு வரும்.டே..பீமா..நல்லா தெம்பா உக்காந்து வாடா...சிவனுக்கு சீக்கு வந்தமாதிரி வர்றான் பாரு...அனுமார் வேஷத்துக்கு அவனுக்கு மேக்கப்பே தேவையில்ல.ஏற்கனவே அந்த மாதிரிதான் இருக்கான்.ராமர் வேஷம் போட்டுகிட்டு எல்லாப்பொண்ணுங்களுக்கும் டாட்டா காட்டிகிட்டு வர்றான் பாரு...இந்தமாதிரி வேஷம் போட்டுகிட்டு வர்றவங்கள செமயா கலாய்ப்பாணுங்க.குசும்பு புடிச்ச (சேலம்) பயலுவ.

இதெல்லாம் பாக்கும்போது பெரியார் அப்பப்ப மைண்ட்ல வந்துட்டு போவாரு.இந்த செலவுகளை ஏதாவது இல்லாத குழந்தைகளுக்கோ,முடியாதவங்களுக்கோ உதவி பண்ணலாம்ன்னு நெனைக்கத்தோணும்.பண்ண மாட்டாங்க...சாமிக்கு கூட அதுதான் பிடிக்கும். பக்தி எனக்கும் இருக்கு. நம்மை மீறிய ஒரு சக்தி நம்மள இயக்குதுன்ற நம்பிக்கை மட்டுமே.மத்ததெல்லாம் மற்றவங்க விருப்பத்துக்காகத்தான் பண்ணிகிட்டு இருக்கோம்.ஆத்திகர்களுக்கு பக்தியாகவும்,நாத்திகர்களுக்கு கேலியாகவும் தோன்றும்.ம்ம்ம்...வளரும் சூழ்நிலைதான் தீர்மானிக்குது.

இதுபோன்ற காட்சிகள்,கலாய்ப்புகளை நேரில் காண வருக.. வருக.. வருக... என அன்போடு அழைப்பது உங்கள் சேலம் தேவா..தேவா..தேவா..ஹி..ஹி... எக்கோ எபக்ட்டோட படிங்க(இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல)

Post Comment

21.9.10

சேலம்ம்ம்ம்ம்டா.......

என்னடா டா போட்டு எழுதறான்னு தப்பா நெனச்சிறாதீங்க!!
பாஸ் (எ) பாஸ்கரன் படம் பாத்த எபக்ட்!!!

சேலம் தேவான்னு பேர மட்டும் வச்சிகிட்டு சேலத்துக்காக நாம
என்ன செஞ்சிருக்கோம்ன்னு நினைக்கிறப்ப மனசுக்கு ரொம்ப
கஷ்டமா இருந்திச்சுங்க!!(ஒண்ணும் செய்யாம இருந்தாவே நல்லதுதான்)

அதுவும் பாருங்க!! நாம பிரபலபதிவர் (!!??) வேற ஆயிட்டோம்...சந்தேகம்னா இண்ட்லியில போய் பாருங்க.. பிரபலமானவைல நம்ம பேரும் இருக்கும்.
(ஒரு 1000 PAGEVIEWS-க்கே இவனோட அலப்பறை தாங்க முடியல. இவனே ஒரு 500 முறை பாத்திருப்பான்)



சேலத்தில இருக்கறவங்க வெளியூர்ல இருக்கற அவங்க சொந்தக்காரங்கள பாக்கப்போனா முதல்ல அவங்க பையத்தான் பாப்பாங்க...மாம்பழம் வாங்கிட்டு வந்திருக்காங்களான்னு!! அப்டி உலகஅளவில்(!!?? )சேலம் மாம்பழம் பேமஸ்.
மாம்பழமாம் மாம்பழமாம்!! மல்கோவா மாம்பழம்!! சேலத்து மாம்பழம்!!
இந்த பாட்டு தெரியாத சின்னப்பி்ள்ளைங்களே தமிழ்நாட்டுல 
கிடையாதுன்னா பாத்துக்கோங்களேன்!!



தமிழ்நாடே தண்ணியில மூழ்கினாலும் (டாஸ்மாக் தண்ணி இல்லங்க) சேலம் மட்டும் மூழ்காது.(நல்ல எண்ணம்டா) எப்டின்னா,சேலத்த சுத்தி நிறைய மலைகள் இருக்கு. அந்த மலைகள் சேலத்துக்கு அரணா இருக்கு. சேலம்ங்கற பேயரே சைலம்(மலைகள்நிறைந்த) என்ற பெயரோட மரூஉதான்.

நானும் வேலைக்காக பல ஊருக்கு போயிருக்கேன்...
ஆனா,சேலம் மாதிரி ஒரு ஊரை பாத்ததே இல்லீங்க!!

மரியாதையான ஊருங்க இது!

எப்டின்னா,உதாரணத்துக்கு சென்னைத்தமிழை எடுத்துக்கிட்டீங்கன்னா சாதாரணமா பேசுறதே நம்மள கெட்டவார்த்தையில திட்ற மாதிரியே இருக்கும்.
முன்குறிப்பு : பின்னூட்டத்துல யாரும் சென்னைத்தமிழை
பயன்படுத்தி திட்டகூடாது.

மதுரைத்தமிழ் பயபுள்ளைங்க பாசமா பேசுற மாதிரி தெரிஞ்சாலும்
கொஞ்சம் பயமாத்தான்இருக்கும்.
முன்குறிப்பு : அழகிரி அண்ணன்ட்ட போட்டுக் குடுத்துறாதீங்க...

திருநெல்வேலி தமிழுக்கு ஒரு டிக்ஸ்னரிதான் போடணும்.
எது பேசுனாலும் ஒரு லே சேத்துக்குவாங்க.வாலே,போலே,ஷோலேன்னு

ஆனா,சேலத்தில பேசுறது நம்ம சொந்தகாரங்ககிட்ட பேசுற மாதிரியே இருக்கும்.யாரா இருந்தாலும் சொல்லுங்கண்ணே,சொல்லுங்கக்கான்னு மரியாதையா பேசுவாங்க பயபுள்ளைங்க...இளையதளபதி விஜய்
வாங்ண்ணா,போங்ண்ணா ன்னு பேசுறாரே அது எங்க ஊரு ஸ்டைல்தான்...

தவிச்சவாய்க்கு தண்ணி தரணும்ன்னு சொல்வாங்க...ஆனா,எங்க சேலத்து மேட்டூர் அணை பல ஊருக்கே தண்ணி கொடுத்துகிட்டுஇருக்கு.

மலைகளின் இளவரசி ''ஏற்காடு" சேலத்திலதான்இருக்கு.
நடுத்தரவர்க்கத்தினருக்கு அதிக செலவில்லாம சுத்திப்பாக்க
ஏற்காடு ஒரு நல்ல சுற்றுலாத்தலம்.

எங்க ஊரு மாடர்ன் தியேட்டர்ஸ் மட்டும் இருந்திருந்தா
சேலம் இன்னும் எங்கேயோ போயிருக்கும்.
ஏன்னா,சென்னை பிரபலமானதற்கு சினிமாவும் ஒரு முக்கியகாரணம்.
சேலத்திலதான் அப்ப நிறைய படம் எடுத்திட்டிருந்தாங்க...அந்தகால படம் அனைத்திலும் ஏற்காடோ,பனமரத்துப்பட்டி ஏரியோ வராம இருக்காது.
நம்ம முதலமைச்சரு கூட நிறைய படத்துக்கு கதைவசனம் ஏற்காட்டில உக்காந்து எழுதி ரசிகர்களை மகிழ்விச்சிருக்காரு(!!??) இன்னமும் விடாம மகிழ்விக்கிறாரு...அப்டியே தொடர்ந்திருந்தா சேலம் தமிழ்நாட்டோட தலைநகரமா கூட ஆயிருக்கலாம்...

அப்புறம் நிறையபடத்துல நீங்க பாத்திருக்கலாம்.இந்த கால் கொலுச
வச்சி நிறைய சென்டிமென்ட்டான சீன்,பாட்டு எல்லாம் வச்சிருப்பாங்க...
அந்த வெள்ளி கொலுசுக்கு பேமஸ் எங்க ஊருதாங்க...
வெளிநாட்டுக்கெல்லாம் கூட ஏற்றுமதி பண்றோம்.

சேலத்து மனுசங்க மட்டும் இரும்பு மாதிரியில்ல,
சேலம் ஸ்டீல்பிளாண்ட் இரும்பும் உறுதியானது.

அதே மாதிரி ஆடி மாசம் வந்துட்டா சேலம் ஜெகஜோதியா இருக்கும்...
ஹெட் ஆபிஸ் கோட்டை மாரியம்மன் கோவில்
மத்த கோயிலுங்க எல்லாம் பிரான்ச் ஆபிஸ் மாதிரி..
கோயிலுங்கன்னா சும்மா இல்ல...தெருவுக்கு ஒரு மாரியம்மன் கோவில்,காளியம்மன் கோவில்,விநாயகர் கோவில் மட்டும்தான் இருக்கும்.
தெருவ விட கோவிலுங்கதான் அதிகமா இருக்கும்(பக்தியான பயபுள்ளைங்க)
கோயிலுங்களுக்கு நன்கொடை தர்றதுக்கே எதாவது ஒரு லோன் போட்டு ஆவணும்.இல்லன்னா ஊரவிட்டு ஒரு மாசம் ஓடிப்போயிரணும்.
அரசுப்பொருட்காட்சி வேற போட்ருவாங்க...கூட்டம் பின்னும்..
அடாவடிபண்ற பிள்ளைங்கள பொருட்காட்சில தொலைக்கிறதுக்கே
கூட்டிட்டு வருவாங்க...

ஒருமனுசனுக்கு ரொம்ப முக்கியமானது உணவு,உடை,உறைவிடம்
இது மூணும்சேலத்துல இருக்கறமாதிரி வேற எங்கயும் இல்லீங்க!!

மத்த ஊர்ல நீங்க உணவுக்காக ஒருத்தருக்கு செலவு பண்ற காசுல
சேலத்துல ஒரு குடும்பமே சாப்பிடலாம்...அதுவும் சுவையா இருக்கும்.
மத்த ஊர்ல நான் சாப்பிடும் போது இதுக்கு பட்டினி கிடந்தே
செத்துரலாம்ன்னு தோணும்.அவ்ளோ டேஸ்ட்டா(!!??) இருக்கும்.
ஒருசில ஊர்ல குழம்புன்னு சொல்லிட்டு ஊத்துவானுங்க பாருங்க...
அது நம்ம இலையிலயே இருக்காது.
பக்கத்துல இருக்கறவரு இலைக்கு போயிடும்.
சேலத்துல நீங்க 10 ரூபா வச்சிருந்தா போதும்...
வயிறார டேஸ்ட்டா சாப்பிடலாம்ங்க!! உண்மைங்க!!

தட்டுவடை செட்டுக்கு சேலத்த விட்டா எந்தஊரும் ஈக்வல் கிடையாது!!
அதுல நம்ம ஆளுங்க காட்டுவாங்க பாருங்க வித்தைங்க...
கலர்கலரா ஒரு 25 வகை சட்னிய வச்சு கலக்குவாங்க...
50ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டு போய் 10ரூபாய்க்கு
தட்டுவடைசெட் வாங்கி திங்கற தின்னுகெட்டவங்க நாங்க...

ஞாயித்துகிழமை ஆனா ஆறறிவு மனுசன தவிர மத்த எல்லா
உயிரினத்தையும் சொர்க்கத்துக்கு அனுப்புற புண்ணியபூமி இது...
அப்டியே கறிகடைகள்ல கூட்டம் அலைமோதும்..வாழ்க்கையில கறியே திங்காதவங்க மாதிரியே க்யூ வரிசையில நிப்போம்...செல்வி மெஸ்,
மங்களம் ஹோட்டல்,ராமலிங்கம் ஹோட்டல்,கேவீஸ்,ரசிகாஸ்ன்னு
ஏரியா வாரியாபேமஸ் ஆன ஹோட்டல்ங்க நிறையா இருக்கு!!

சேலத்த சுத்தி நிறைய கைத்தறிங்க,விசைத்தறிங்க ஓடுது.அதனால,இங்க எல்லா வகையான துணிங்களையும்,விலை குறைவா வாங்கலாம்.சேலம் பழையபஸ்ஸ்டாண்ட சுத்தி நிறைய துணிக்கடைங்க இருக்கு.ஒரிஜினல் பட்டுப்புடவை வாங்க வசதியில்லாதவங்களுக்கு அபூர்வா பட்டுன்னு ஒரு வகை இருக்கு.அது சேலம் மாவட்டத்துலதான் அதிகமா தயார் பண்றாங்க.

அப்புறம் சென்னை மாதிரி சாப்ட்வேர் நிறுவனங்கள் இன்னும் இங்க
வராததால வீட்டுவாடகை எல்லாம் ஒரளவு நம்ம
பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகற அளவுக்குதான் இருக்கும்.


எங்க ஊரு பெருமைய இன்னும் 50 பதிவு போடலாம்...
ஆனா,நீங்க இவன் சரியான பெருமைபீத்தகளையன்னு திட்டுவிங்க...
(வார்த்தைக்கு அர்த்தம் புரியலன்னா வம்சம் படம் பாருங்க)
அதனால இதோட நிறுத்திக்கறேன்....


மொத்தத்துல இளையராஜா பாடின மாதிரி சொர்க்கமே 
என்றாலும் அது எங்க ஊரு போல வராதுங்க!!!





Post Comment