சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

14.1.13

இரு மலர்கள்

வேலைப்பளு சற்று அதிகமாக போட்டு அழுத்துகிறது. ட்விட்டரும்,பேஸ்புக்கும்,கூகிள் ப்ளஸூம் வலைப்பூ எழுதுவதற்கான நேரத்தை ஆக்ரமித்துக்கொண்டது. இது ஒரு நொண்டிச்சாக்குதான்....:)  நேரத்தை திட்டமிட்டு ஒதுக்க தெரியவில்லை.அவ்வளவே...தியானம் செய்தால் ஏற்படும் ஒருவித மனஅமைதி இந்த வலைப்பூவில் எழுதுவதால் (அது உங்களுக்கு மொக்கையாகவே இருந்தாலும்) எனக்கு கிடைக்கிறது. :)

சென்ற வெள்ளிக்கிழமை (4-1-2013) எனக்கு இரண்டாவதாக ஒரு மகள் பிறந்தாள். வெள்ளிக்கிழமையா...மகாலட்சுமியே பொறந்துருக்கா...நீ எங்கேயோ போக போற...இனிமே டாப்தான்...தொழில்  அமோகமா இருக்கும். இதுபோன்ற பல கலவையான வாழ்த்துரைகள்.நேரில் சொன்னவர்கள் முகத்தைப்பார்க்கையில் (இரண்டாவதும் பொண்ணா...என்ற பார்வையில் ) சற்று அனுதாபத்துடனே கூறியது போன்று ஒரு உணர்வு. :)

99% உங்களுக்கு பையன்தான் என்று சொன்ன சோதிடர் கூட மேற்சொன்ன  வாழ்த்துரைகளை ஒருவித சமாளிப்புடன் பிறந்த மகளுக்கு நேரம் கணிக்கச்சென்றபோது சொன்னார். இதற்குதான் சொன்னேன் ஜாதகத்தை நம்பக்கூடாதென்று...  :) 

எப்படியோ சிறுவயதில் கூட விளையாடுவதற்கும்,வளரும் வயதில் ஒரு தோழியாகவும் இருக்க என் மகளுக்கு ஒரு தங்கை பிறந்துவிட்டாள்.இந்த வலைப்பூவை என் முதல் மகள் பிறந்த சமயத்தில் துவங்கி எழுத ஆரம்பித்தேன்.பிற்காலத்தில் அவளது மலரும் நினைவுகளை புரட்டிப்பார்க்கும் ஒரு தளமாக இது இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு,அவ்வப்போது அவள் சார்ந்த நிகழ்வுகளையும்,புகைப்படங்களையும் பதிந்து வந்தேன்.இப்போது சின்ன மகளுக்கும் சேர்த்து பதிய வேண்டும்.  :)

இந்த சமயத்தில் எனது கணினியில் ஏற்பட்ட ஒரு கொடுமையை சொல்லவேண்டும்.எனது பெரிய மகள் செய்யும் ஒவ்வொரு புதிய செயலையும் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் பதிவு செய்து ஒரு வன்தட்டில்(அதாங்க Hard Disk) வைத்திருந்தேன். நன்றாகவே வேலை செய்து கொண்டிருந்த அது திடீரென்று மோட்சம் அடைந்து விட்டது.அதை மிட்பதற்குண்டான பல வழிகளில் முயன்றும் அதில் உள்ள புகைப்படங்கள் கிடைக்கவில்லை. :( 

எனவே,நண்பர்கள் தாங்கள் முக்கியமானதாக நினைக்கும் கோப்புகளையும், படங்களையும் வன்தட்டில் வைத்திருந்தால் அதை இரண்டு DVD-க்களில் பதிவு செய்து வைத்துக்கொள்ளவும். அல்லது தற்போது பிரபலமாகிவரும் மேகக்கணினியகம் முறையில் கூகிள் ட்ரைவிலாவது சேமித்துக்கொள்ளவும். வரலாறு முக்கியம். :)

விவசாயிகள் கொண்டாடும் முக்கியப்பண்டிகையான பொங்கல் தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் அதற்குண்டான மனநிலையில் இருப்பார்களா என்றால் சந்தேகம்தான்....பருவமழை பொய்த்துவிட்டது. இறையாண்மை மிக்க தேசம் என்று பெருமை அயல்நாடுகளில் சொல்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.இங்குள்ள மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப்பங்கீட்டு சண்டைகளைப் பார்த்தால் அப்படி ஒன்று உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.விவசாயிகளின் தற்கொலைகள் வருத்தத்தைத் தருகிறது.எப்படிப்பட்ட நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பார்கள்..?! :(

வாழ்த்துகள் சொல்வது ஒரு சம்பிரதாயமாக ஆகிவிட்டது.இப்போதுள்ள சூழ்நிலையில் அது அபத்தமாக படுகிறது.சென்ற வருடம் நாசர் அவர்கள் அளித்த இந்த ஆவேசமான பேட்டி இப்போதும் பொருந்துகிறது. நதிநீர்ப்பிரச்சினையும்,மின்வெட்டும் கூட சேர்ந்து கொண்டது.




இருந்தாலும் நமது ஊர் தொலைக்காட்சிகள் அந்த சோகங்கள் தெரியாமல் நம்மை வைத்திருக்க  பாடுபடுவதை நினைத்தால்....
என்னமோ போங்க.... Happy Pongal.

Post Comment

1 comment:

  1. உங்களுடைய இரண்டாவது மகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கு இரண்டு பசங்க உங்களுக்கு இரண்டு பொண்ணுக :-)

    இந்த தை திருநாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நல்ல செய்திகளை தரட்டும்.

    உங்கள் நிழல் படங்களை கூகுள் டிரைவில் சேமித்து இருந்து இருக்கலாம்... கையோட இரட்டை அடுக்கு பாதுகாப்பு (SMS பாதுகாப்பு) முறையையும் செயல்படுத்தி விடுங்கள்.

    ReplyDelete

No Bad Words... தேவா பாவம்!!!