சீரியஸாவே இருந்தா வாழ்க்கை சிரிச்சிடும்...

16.1.13

Bicycle Memories

Bicycle Thieves படம் ஒரு ஒலகப்புகழ் பெற்ற திரைப்படம்.பல விருதுகளை குவிச்ச படம்.சிறந்த 100 படங்கள் லிஸ்ட்ல இந்தப்படமும் ஒண்ணுன்னு படிச்சிருக்கேன்.பாத்ததில்ல...யூடியூப்ல இருக்கும் பாத்துக்கலாம். அந்தப்படத்தப்பத்தி நம்ம திரைவிமர்சகபதிவர்கள் பிரிச்சி  பூட்டியிருப்பாங்க... அத அங்க போய் படிச்சுக்கோங்க...இந்தப்பதிவு நம்மளோட சின்ன வயசு சைக்கிள் ஞாபகங்களைப்பத்தி...



சமீபத்தில் ஸ்ரீகாந்த் நடித்த பாகன் திரைப்படம் பார்க்க நேர்ந்தது.(3 மாசத்துக்கு முன்னாடி வந்த படத்த இப்ப பாத்துட்டு சமீபமாம்).அதில் ஒரு மிதிவண்டி...வேணாம்...சைக்கிள்ன்னே வச்சிக்குவோம். ஒரு சைக்கிள்  தன் முதலாளியோட (ஸ்ரீகாந்த்) கதைய வாய்ஸ் ஓவர்ல சொல்ற மாதிரி கதை அமைச்சிருப்பாங்க...சில பல நல்ல அம்சங்கள்  இருந்தும் அந்த படம் பஞ்சரானது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான்.எப்டியும் தமிழ்புத்தாண்டுக்கு சன் டிவில போடுவாங்க...அப்ப பாருங்க...இன்னும் கொஞ்சம் நல்லா திரைக்கதையும்,விளம்பரங்களும் அமைச்சிருந்தா படம் ஓடியிருக்கும்ன்னு நெனைக்கிறேன்.


ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் சைக்கிள் இல்லாம கடந்துருக்க மாட்டாங்க...சின்ன வயசுல கத்துக்குற டைம்ல சைக்கிள்தான் பல விழுப்புண்களை நமக்கு முதல்ல தரும். நமக்கு உயரம் பத்தலேன்னாக்கூட கூட்டாளிங்க யாராவது ஓட்டிட்டா உடனே நாமளும் அதை செஞ்சாகணும். கொஞ்சநஞ்சம் தர்ற பாக்கெட்மணிய சேத்து வச்சு நமக்கு சைக்கிள் கத்து தர்றதுக்குன்னு பந்தா பண்ற அண்ணன்,அக்காக்களுக்கு கொடுத்தது போக மீதி சைக்கிள் கடையில் வாடகைக்காக கொடுத்து அந்த தேஞ்சு போன,ஒழுங்கான டயர் இல்லாத,பிரேக் இல்லாத,காத்து இல்லாத, லொட லொடன்னு சவுண்ட் வர்ற சைக்கிள ஓட்ற சொகம் இருக்கே...BMW கார் சொந்தமா வாங்கி ஓட்டும்போது ஒரு பெருமிதம் வரும் பாருங்க...அதுக்கு சளைச்சதில்ல....  :)


1 மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் எடுத்துட்டு அந்தக் கடையையே சுத்தி சுத்தி  வந்து அண்ணா..மணியாயிடுச்சா...மணியாயிடுச்சான்னு 10 தடவை கேட்டு சைக்கிள் கடைக்காரரை நோகடிச்சது. அவரு வேகமா ஓடற கடிகாரத்த வச்சிகிட்டு 5 நிமிஷமாவது நம்மள ஏமாத்தறது. சின்ன சைக்கிள கால் கீழ ஊன்றாம ஓட்டிட்டா அடுத்து அப்பாவோட பெரிய சைக்கிள்ல குரங்கு பெடல் டிரை பண்றது.அத ஓட்டும்போது செயின்ல கால் மாட்டிகிட்டு பல ரத்தக்காயங்கள் பாத்தது.மறந்துபோய் பூட்ட திறக்காம சக்கர போக்ஸ் கம்பிங்களை உடைச்சது.லைட் இருந்தா அத எரிய வைக்கிறேன்ற பேர்ல பின்னாடி சக்கரத்த சுத்தி சுத்தி படம் காமிச்சது.இருபதடி இருக்கற மளிகைக்கடைக்கு கூட சைக்கிள் ஓட்ற சுகத்துக்காக பல தெருவ சுத்திட்டு வந்து வீட்டுக்கு எடுபிடி வேலை செஞ்சதுன்னு அது ஒரு சைக்கிள் காலம். :)


ஹிஹி...மேல இருக்கற படம் மாதிரி(சைக்கிள் படம் கிடைக்கல)  நம்ம டபுள்ஸ் சோதனைக்கு நாம பலிகடா ஆகறது...இல்ல நம்மள நம்பி வர்றவங்க பலிகடா ஆகறதுக்கு உதாரணம். நமக்கு மாட்ற கூட்டாளிங்க உசிலமணி மாதிரியே இருப்பாங்க...நாமளோ ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரியே இருப்போம்.இதுக்கு நம்ம வீட்ல சர்ட்டிபிகேட் கொடுப்பாங்க...குண்டா இருக்கறவங்க கள்ளம்கபடம் இல்லாதவங்களாம் ஒல்லியா இருந்தா வினையாம். வினை புடிச்சவனே... உனக்கு உடம்பே ஏறாதுரான்னு நம்மள கேவலப்படுத்தறது. :(

எனக்கு தெரிஞ்சு பேப்பர் போடற பசங்களுக்கு பிற்கால வாழ்க்கைல ஒரு கால ஒழுங்கும்,உழைக்கும் பணத்தோட அருமையும் தானாகவே வந்துரும். உடம்பும் கட்டுக்கோப்பா இருக்கும்.அது மாதிரி நிறைய பேர பாத்திருக்கேன். 
சின்ன வயசுல தொழிலுக்காக அதை பயன்படுத்திட்டு பிற்காலத்துல வசதி வந்த பிறகும் அதை மறக்காம விக்காம பூஜை பண்ணறவங்களையும் பாத்திருக்கேன்.(அண்ணாமலை படம் ஞாபகம் வருதா..?!)

என்னோட பள்ளி காலங்களும், IIT ச்சீ...ITI படிச்சப்பயும் சைக்கிள்லயே (போக வர) 28 KM ஓட்னதால உடம்பு ஏறவே இல்ல...படுத்தா அப்டி தூக்கம் வரும். இந்தக்கணினி சார்ந்த வேலைக்கு எப்ப வந்தேனோ அப்பயே உடம்பு ஊத ஆரம்பிச்சிருச்சு...லைட்டா முதுகு வலி ஆரம்பிச்சிருச்சு..     சோம்பேறித்தனம்தான்... முழிச்சுக்கோங்க மக்களே...  உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்க...(அப்பா..மெஸேஜ் சொல்லியாச்சு...யாரும் மொக்க பதிவு,வேஸ்ட் பதிவுன்னு சொல்லிரக்கூடாதுல்ல)

இதே மாதிரி உங்களோட சைக்கிள் ஞாபகங்களையும் பகிர்ந்துக்கோங்க.....

படங்கள் கடன்: கூகிளாண்டவர்  (Images Credit : Google)  :)

Post Comment

14.1.13

இரு மலர்கள்

வேலைப்பளு சற்று அதிகமாக போட்டு அழுத்துகிறது. ட்விட்டரும்,பேஸ்புக்கும்,கூகிள் ப்ளஸூம் வலைப்பூ எழுதுவதற்கான நேரத்தை ஆக்ரமித்துக்கொண்டது. இது ஒரு நொண்டிச்சாக்குதான்....:)  நேரத்தை திட்டமிட்டு ஒதுக்க தெரியவில்லை.அவ்வளவே...தியானம் செய்தால் ஏற்படும் ஒருவித மனஅமைதி இந்த வலைப்பூவில் எழுதுவதால் (அது உங்களுக்கு மொக்கையாகவே இருந்தாலும்) எனக்கு கிடைக்கிறது. :)

சென்ற வெள்ளிக்கிழமை (4-1-2013) எனக்கு இரண்டாவதாக ஒரு மகள் பிறந்தாள். வெள்ளிக்கிழமையா...மகாலட்சுமியே பொறந்துருக்கா...நீ எங்கேயோ போக போற...இனிமே டாப்தான்...தொழில்  அமோகமா இருக்கும். இதுபோன்ற பல கலவையான வாழ்த்துரைகள்.நேரில் சொன்னவர்கள் முகத்தைப்பார்க்கையில் (இரண்டாவதும் பொண்ணா...என்ற பார்வையில் ) சற்று அனுதாபத்துடனே கூறியது போன்று ஒரு உணர்வு. :)

99% உங்களுக்கு பையன்தான் என்று சொன்ன சோதிடர் கூட மேற்சொன்ன  வாழ்த்துரைகளை ஒருவித சமாளிப்புடன் பிறந்த மகளுக்கு நேரம் கணிக்கச்சென்றபோது சொன்னார். இதற்குதான் சொன்னேன் ஜாதகத்தை நம்பக்கூடாதென்று...  :) 

எப்படியோ சிறுவயதில் கூட விளையாடுவதற்கும்,வளரும் வயதில் ஒரு தோழியாகவும் இருக்க என் மகளுக்கு ஒரு தங்கை பிறந்துவிட்டாள்.இந்த வலைப்பூவை என் முதல் மகள் பிறந்த சமயத்தில் துவங்கி எழுத ஆரம்பித்தேன்.பிற்காலத்தில் அவளது மலரும் நினைவுகளை புரட்டிப்பார்க்கும் ஒரு தளமாக இது இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு,அவ்வப்போது அவள் சார்ந்த நிகழ்வுகளையும்,புகைப்படங்களையும் பதிந்து வந்தேன்.இப்போது சின்ன மகளுக்கும் சேர்த்து பதிய வேண்டும்.  :)

இந்த சமயத்தில் எனது கணினியில் ஏற்பட்ட ஒரு கொடுமையை சொல்லவேண்டும்.எனது பெரிய மகள் செய்யும் ஒவ்வொரு புதிய செயலையும் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் பதிவு செய்து ஒரு வன்தட்டில்(அதாங்க Hard Disk) வைத்திருந்தேன். நன்றாகவே வேலை செய்து கொண்டிருந்த அது திடீரென்று மோட்சம் அடைந்து விட்டது.அதை மிட்பதற்குண்டான பல வழிகளில் முயன்றும் அதில் உள்ள புகைப்படங்கள் கிடைக்கவில்லை. :( 

எனவே,நண்பர்கள் தாங்கள் முக்கியமானதாக நினைக்கும் கோப்புகளையும், படங்களையும் வன்தட்டில் வைத்திருந்தால் அதை இரண்டு DVD-க்களில் பதிவு செய்து வைத்துக்கொள்ளவும். அல்லது தற்போது பிரபலமாகிவரும் மேகக்கணினியகம் முறையில் கூகிள் ட்ரைவிலாவது சேமித்துக்கொள்ளவும். வரலாறு முக்கியம். :)

விவசாயிகள் கொண்டாடும் முக்கியப்பண்டிகையான பொங்கல் தற்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் அதற்குண்டான மனநிலையில் இருப்பார்களா என்றால் சந்தேகம்தான்....பருவமழை பொய்த்துவிட்டது. இறையாண்மை மிக்க தேசம் என்று பெருமை அயல்நாடுகளில் சொல்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.இங்குள்ள மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப்பங்கீட்டு சண்டைகளைப் பார்த்தால் அப்படி ஒன்று உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.விவசாயிகளின் தற்கொலைகள் வருத்தத்தைத் தருகிறது.எப்படிப்பட்ட நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பார்கள்..?! :(

வாழ்த்துகள் சொல்வது ஒரு சம்பிரதாயமாக ஆகிவிட்டது.இப்போதுள்ள சூழ்நிலையில் அது அபத்தமாக படுகிறது.சென்ற வருடம் நாசர் அவர்கள் அளித்த இந்த ஆவேசமான பேட்டி இப்போதும் பொருந்துகிறது. நதிநீர்ப்பிரச்சினையும்,மின்வெட்டும் கூட சேர்ந்து கொண்டது.




இருந்தாலும் நமது ஊர் தொலைக்காட்சிகள் அந்த சோகங்கள் தெரியாமல் நம்மை வைத்திருக்க  பாடுபடுவதை நினைத்தால்....
என்னமோ போங்க.... Happy Pongal.

Post Comment